Tuesday, September 26, 2006

திலீபன், காந்தி, அகிம்சை

இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.

திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?

"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.

in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.

என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.

இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.

இவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.

காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.

காந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது

தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.

இத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.

அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.

திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

29 மறுமொழிகள்:

-/சுடலை மாடன்/- said...

//அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.//

அதைவிட மோசம் ஏற்கனவே நோயாளியாக இருந்தார் என்று ஒரு கதை சொல்லியும், அவரை வற்புறுத்தியோ, மிரட்டியோ அவரை பிரபாகரன் பணிய வைத்ததாக இன்னொரு கதை சொல்லியும் திலீபனின் மரணத்தை கொச்சை படுத்திக் கொண்டிருந்தது இந்தியா.


//மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.//

"வெள்ளைக்காரர்கள் அகிம்சைப் போராட்டத்தை மதித்தனர்" என்று வழக்கமாக ஜல்லியடிப்பதுண்டு. ஆனால் நீங்கள் எழுதியிருக்கிற காரணம்தான் சரியாகப் படுகிறது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

12:45 AM, September 27, 2006
Gopalan Ramasubbu said...

இந்திய விடுதலைக்கு காந்தியின் அகிம்சை வழிப்போராட்டம் மட்டும் காரனம் அல்ல, சுபாஷ் சந்திர போஷின் ஆயுதப் போராட்டமும் ஒரு காரனம்.அகிம்சை, அகிம்சை என்று பேசிக் கொண்டே அணுகுண்டு தாயாரிக்கும் நம் இந்தியா பாக்கிஸ்தானுடன் யாரும் முதலில் அணுகுண்டு உபயோகிக்க வேண்டாம் என்று ஒப்பந்தம் வேறு போடுகிறது. இதையெல்லாம் நினைக்கும் போது சோர்வும்,எரிச்சலும் தான் வருகிறது. நல்ல கட்டுரை சசி.

12:50 AM, September 27, 2006
வெற்றி said...

சசி,
வணக்கம்.
மிகவும் அருமையான பதிவு. உண்மையில் பல நாடுகளின் போராட்ட வரலாறுகளைப் படித்தவன், படித்து வருபவன் எனும் முறையில் சொல்கிறேன், நான் உங்கள் கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன். எதிரியைப் பொறுத்துத்தான் போராட்ட முறையும் அமையும். ஈழத்திலும் 1918 முதல் குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர்[1948] சாத்வீகப் போராட்டங்கள் மூலம்தான் எமது உரிமைகளைப் பெறுவதற்கு நாம் போராடினோம். 1977ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இலங்கையை விட்டு தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடமைப்பதற்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களிடம் தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்குக் கேட்டது. இலங்கையின் வட கிழக்கில் வாழும் 95 வீதத்திற்கும் மேலான தமிழ்மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் சாத்வீகப் போராட்டங்களையோ , அல்லது தமிழ்மக்கள் சனநாயக ரீதியாகத் தேர்தல் மூலம் சொன்னதையோ சிங்கள அரசு கேட்கவில்லை.மாறாக தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமித்து, தமிழ்மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தது. ஆக, அடக்கியாள்பவர்கள்தான் போராட்ட முறையைத் தீர்மானிப்பது. அடக்கப்படுபவர்கள் அல்ல.

1:37 AM, September 27, 2006
aathirai said...

//இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட
பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய
காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு
இருப்பதாக நான் நினைக்க வில்லை.//

மிகவும் சரி. இந்த வகையில் காந்தியை விட இந்தியர்கள்
ஹிட்லருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தங்களுக்குள்
சண்டையிட்டு ஐரோப்பாவை தரை மட்டமாக்காவிட்டால்
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா? ஹிட்லர்
தானே அழிந்துவிட்டதால் அவருக்கு அடிமையாகும் ப்ரச்சினையும் இல்லை.

//இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. // true

2:30 PM, September 27, 2006
Anonymous said...

காந்தி ஒரு போதும் பிரித்தானியாவிற்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவில்லை. காந்தியின் உண்ணாவிரதம் நேரடியாக பிரிந்தானியவிடம் Demand செய்யவில்லை.

7:54 PM, September 27, 2006
Anonymous said...

சசி,

தங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. அகிம்சையால் மட்டும் இந்தியா சுதந்திரம் வாங்கவில்லை என்பதிலும், பொருளாதாரக் காரணங்கள் முக்கியமானவை என்பதிலும் ஒப்பு உண்டு. அதே போல், எண்ணிக்கையிலும் வலிமையிலும் பெருத்த ஒரு எதிரியை வெல்ல ஆயுதம் ஏந்தியப் போர் தேவைப் படலாம் என்பதிலும் பெரிய மறுப்பு இல்லை. ஆனால், அகிம்சை என்பது ஒரு உளுத்துப் போன தத்துவம் என்று நீங்கள் சொல்வது எனக்குச் சரியாகப் படவில்லை. பரந்த மக்கள் ஆதரவின்றி, ஆயுதப் போரினால் மட்டும் பெரும் விடுதலை என்பது நிலையானது அல்ல. அது மிக ஒழுக்கமான ஆனால் மிகச்சில வீரர்கள், மற்றவர்களுக்காகப் பெற்றுத்தரும் ஒரு பரிசு மட்டுமே. சுயமாக சம்பாதிக்காமல் பெற்றோரிடம் இருந்து வரும் சொத்து போன்றது இது. அதன் அருமை சீக்கிரம் மறந்துவிடும். அத்தகைய வெற்றி, போர் வெற்றி மட்டுமே தவிர, விடுதலை அல்ல (இந்தப் பொருள் படும்படி காந்திஜியின் quotation ஒன்று உண்டு என நினைக்கிறேன்). எனவே மக்களை ஒன்று திரட்டுவதற்கு நீங்கள் கூறும் அந்தக் "கவன ஈர்ப்பு" இன்றியமையாதது. இந்திய விடுதலைப் போரில் அந்தக் கவன ஈர்ப்புச் சக்தி காந்திஜியின் அகிம்சைக்கு இருந்தது என்பது மறுக்க முடியாதது. தமிழீழப் போரிலும் திலீபன் மறைந்தது அவரது தோல்வியல்ல - வெற்றியே. ஒரு உயிர் எத்தனை மக்களை இணைத்தது - அதுவே அதன் வெற்றி. ஆந்திரத்தின் பொட்டி ஸ்ரீராமுலு கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரும் உண்ணா நோன்பு இருந்து தான் உயிர் நீத்தார் - உயிர் போகும் வரை அரசு கண்டு கொள்ளவும் இல்லை. ஆனால் அவரது இறப்பு சேர்த்த மக்கள் சக்தி தான் தனி ஆந்திர மாநிலம் உருவாகக் காரணம். அவர் இறப்பும் அகிம்சையின் தோல்வியல்ல - வெற்றியே. எனவே, இன்றைய சூழ்நிலையிலும் அகிம்சைப் போராட்டம் என்பது ஒரு வலிமையான ஆயுதம் தான், நீர்த்துப் போன தத்துவம் இல்லை என்பது என் கருத்து.

-கார்த்திக்

5:59 PM, September 29, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

கார்த்திக்,

உங்கள் கருத்துக்கு நன்றி

எந்தப் போராட்டமாக இருந்தாலும் அது மக்கள் போராட்டமாக இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது.

ஆயுதப் போராட்டம் ஒரு சிறு குழு மக்களுக்கு தரும் வெற்றி என்பது எந்தவகையிலும் சரியல்ல. ஏனெனில்
அகிம்சை போராட்டத்தை விட ஆயுதப்போராட்டத்திற்கு தான் மக்களின் ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது. ஈழம், பாலஸ்தீனம் என அனைத்துப் பகுதியிலும் மக்களை உள்ளடக்கியே ஆயுதப் போராட்டங்கள் நடந்தன, நடந்து வருகின்றன.

மக்களை உள்ளடக்காமல் சில குழுக்களால் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் சிதறியதையும் பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஏன் பஞ்சாப் 80களில் இருந்த நிலையே ஒரு உதாரணம் தானே ?

அது போலவே அகிம்சை அனைத்து மக்களையும் உள்ளடக்கிய போராட்டம் என்பதும் சரியல்ல. அப்படியெனில் காந்தியின் பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவா நடந்தது ?

நான் கூறுவது இது தான் ..

அகிம்சை போராட்டம், போராட்டம் நடத்துபவருக்கு வலுவிருந்தால் தான் வெற்றி பெறும்.

காந்தி சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலும், இந்தியாவிடம் பிரிட்டிஷாரை நெருக்குதலுக்கு உள்ளாக்க கூடிய வலு இருந்தது.

ஆனால் போராடுகின்றவருக்கு எதிரியை நெருக்குதலுக்கு உள்ளாக்க கூடிய வழி இல்லையெனில், அகிம்சை வெற்றி பெற முடியாது. எதிரியின் வலிமையையும் குறைக்காமல், எதிரியின் தயவை மட்டும் நம்பிக்கொண்டு போராட முடியாது

12:07 AM, September 30, 2006
மா சிவகுமார் said...

'காந்தித் தாத்தா சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்' என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட பாடம் என்பது சரிதான்.

காந்தியின் போராட்டங்கள், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இருந்ததை விட இந்தியா என்ற நாட்டின் சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து இருந்ததுதான் அதிகம்.

'நாம் நம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால், சமூக மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால், ஆங்கிலேயர்கள் போய் விட்டாலும் நாம் அடிமையாகத்தான் இருப்போம், எனவே நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுதான் நாம் உண்மையான சுயாட்சி பெறுவதற்கு அவசியம்' என்பதுதான் காந்தியின் அணுகுமுறையாக இருந்தது.

'அந்தச் சீர்திருத்தம் வந்து விட்டால் ஆங்கிலேயர்கள் இருந்தாலும், இல்லா விட்டாலும் நாம் சுதந்திரமானவர்களாகி விடுவோம். அதே சமூக அவலங்களுடன் சுயாட்சி பெற்றால் எந்தப் பலனும் இல்லை.' இதுதான் காந்தீயம்.

ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு வசதியான, தவிர்க்க முடியாத நிலையில்தான் வெளியே போனார்கள் என்பது உண்மைதான். அதற்குள் நம்மை நாமே ஆளத் தயார் செய்து கொள்ள காந்தி ஆற்றிய சமூகப் பணி பெருமதிப்பு வாய்ந்தது.

பிற நாட்டு இயக்கங்களைப் பற்றி நான் அதிகம் படிக்கவில்லை. (ஈழம் பற்றி உங்கள் பதிவுகளில்தான் அதிகம் தெரிந்து கொண்டேன்.) எந்தப் போராட்டத்திலும் எதிராளிக்கு எதிராக அகிம்சையோ சத்தியாக்கிரகமோ செல்லாது.

சத்தியாக்கிரகம் என்பது தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் சீர்திருத்தப் பயன்படும் ஒரு கருவி. அப்படித் திருந்தி விட்டால் எதிராளியின் வன்முறை நம் மீது செல்லுபடி ஆகாது.

சுதந்திரத்துக்குப் பின் மலேசியாவுடன் இணைந்த சிங்கப்பூர் எப்படி வன்முறை இல்லாமல் வெளியேற்றப்பட்டது?

(அதீதக் கற்பனையாக இருந்தாலும், நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருந்தாலும்,) தமிழீழமும் சிங்கப்பூர் போல செழிப்பாகவும், உறுதியாகவும், ஆற்றல் நிறைந்தும் இருந்தால், சிங்கள ஆதிக்கவாதிகள் தாமாகவே பொறுக்க முடியாமல் தமீழழத்தை தனி நாடாக வெளியேற்றியிருப்பார்கள் அல்லவா? காந்தீய வழி அதைத்தான் முயன்றிருக்கும்.


அன்புடன்,

மா சிவகுமார்

11:27 AM, September 30, 2006
கொழுவி said...

//இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?//

அப்ப காந்தி தாத்தா இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கலையா.. நான் நினைச்சன் உந்த எல்லா நாட்டின் சுதந்திரத்துக்காகவும் தான் அவர் உண்ணாவிரதம் இருந்தவர் எண்டு. அதனாலை தான் எல்லா நாட்டுக்கும் சுதந்திரம் கிடைச்சதாக்கும் எண்டு

11:59 AM, September 30, 2006
மஞ்சூர் ராசா said...

உங்கள் கட்டுரையில் உண்மை இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு அகிம்சையும் ஒரு முக்கிய காரணி என்பதை நாம் மறுக்க முடியாது.

அடுத்து திலீபனின் மறைவு நிச்சயம் தோல்வியல்ல. ஒரு மாபெரும் வெற்றிக்கான உயிர்தியாகம்.

பகத் சிங் போன்ற உறுதியான அதே சமயத்தில் அகிம்சை வழியில் போராடிய திலீபனின் நாடு நிச்சயம் ஒரு நாள் சுதந்திரம் அடையும்.

1:52 PM, September 30, 2006
Thangamani said...

சசி, இன்றுதான் படிக்கிறேன். நல்ல கட்டுரை. காந்தி மக்களை இணைக்க அகிம்சை வழிப்போராட்டங்களைப் பயன்படுத்தினார். மக்களை இணைத்தால் இந்தியாவில் பிரிட்டீஷ் அரசை அசைக்கமுடிந்தது. அதன் காரணம் நீங்கள் சொல்லியபடி இந்தியாவின் பொருளாதார மூலம் இந்தியர்களால் கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதால் தான்.

ஆனால், இந்தியாவிலோ, ஈழத்திலோ அகிம்சை வழியில் மக்களை இணைத்தாலும், மக்கள் திரண்டு ஜனநாயக வழியில் போராடினாலும் அரசுகள் அதை செவிமடுக்கக்கூடச் செய்யாது அலட்சியப்படுத்திவிடவே செய்யும்.ஆந்திரத்தின் பொட்டி ஸ்ரீராமுலு மட்டுமல்ல தமிழ்நாட்டின் சங்கரலிங்கனாரும் கூட சாதாரண, சிறிய, நியாயமான உரிமைகளுக்காக தங்கள் சொந்த நாட்டிலேயே உயிரைக்கொடுக்க வேண்டிவந்தது. மேதா பட்கர் அகிம்சை வழியில் போராடினாலும் எதுவும் சாதிக்கமுடியாமல் போவதும் இதனால் தான். ஏனெனில் அம்மக்களுக்கு இந்தியாவின் பொருளாதார பலத்தை அசைக்கும் வலிமை இல்லை. வெறும் உரிமையின் குரல், நியாயத்தின் குரல் மட்டும் அகிம்சைவழியில் எழுப்பப்பட்டால் இந்தியா, இலங்கை போன்ற அரசுகளை எட்டிவிடும் என்று சொல்வது கற்பனை மட்டுமல்ல, அது மக்களுக்கு எதிரானதும் கூட.

2:32 PM, September 30, 2006
Machi said...

/போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன/

கடும் பொருளாதார நெருக்கடி உள்ள போது யாராவது பொன் முட்டை இடும் வாத்தை வேண்டாம் என்று சொல்வார்களா?
இந்திய செல்வம் பிரித்தானிய அரசுக்கு மிகவும் தேவையானது அல்லவா? இந்தியா சிறிய நாடும் அல்ல செல்வத்தில் குறைந்த நாடும் அல்ல எனும் போது மற்ற நாடுகள் (காலணிகள்) இல்லாமல் இந்தியாவை மட்டும் காலணியாக வைத்திருப்பது லாபம் & எளிது. ஆனால் பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவிற்கு பின் தான் சுதந்திரம் பெற்றன.

எனவே பொருளாதாரம் காரணமாக இந்தியாவுக்கு பிரித்தானியா விடுதலை கொடுத்தது என்பது ஏற்கும்படியாக இல்லை. வேறு காரணங்களே முதன்மையாக இருக்கவேண்டும்.

3:52 PM, October 02, 2006
மயிலாடுதுறை சிவா said...

நல்ல பதிவு சசி..

ஈழப் போரட்டத்தில் தீலீபன் ஓர் மறுக்கமுடியாத பாத்திரம். ஈழ மக்களின் சுதந்திர காற்றை சுவாசிக்க தன் சுவாசத்தை தமிழ் உலகுக்கு பறைச் சாற்றியவன்.

உலக வரலாற்றில் ஒருவன் இறந்து போவதற்கு முன்பாகவே "இரங்கல்பா" பாட பாட்டு இறந்த ஓர் அஞ்சா நெஞ்சன், மாவீரன். தீலீபன்.

உங்கள் கட்டுரைக்கு மனதார பாராட்டுகள்.

மயிலாடுதுறை சிவா...

10:00 PM, October 02, 2006
ஜோ/Joe said...

மற்றுமொரு அருமையான பதிவு!

10:17 PM, October 02, 2006
ஜோ/Joe said...

//சுதந்திரத்துக்குப் பின் மலேசியாவுடன் இணைந்த சிங்கப்பூர் எப்படி வன்முறை இல்லாமல் வெளியேற்றப்பட்டது?
//
மா.சிவகுமார்,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சரியாக புரியவில்லை .மலேசியாவிலிருந்து பிரிய வேண்டுமென்று சிங்கப்பூர் விரும்பவில்லை .மாறாக சிங்கப்பூர் தேவையில்லையென மலேசியாவிலிருந்து கழட்டி விடப்பட்டது .சிங்கப்பூர் கழட்டிவிடப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் அறிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ கண்ணீர் விட்டார் .அந்த கண்ணீர் சாதிக்க வேண்டும் என்ற உறுதியாய் மாறி ,சிங்கப்பூரை இந்த நிலைக்கு உயர்த்தியது.

10:23 PM, October 02, 2006
இலவசக்கொத்தனார் said...

நல்ல கட்டுரை சசி. வாழ்த்துக்கள். அதிகம் விவாதிக்கப் பட வேண்டிய கருத்துக்கள்.

10:38 PM, October 02, 2006
ஜடாயு said...

நல்ல பதிவு. இன்று தான் பூங்கா மூலம் படித்தேன்.

// காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடப்புத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையைச் சலவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை //

உடன்படுகிறேன் ஓரளவு. காந்தியின் போராட்டத்திற்கு ஓரளவு வெற்றி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். இதற்கு ஒரு முக்கியக்காரணம் என்ன என்றால் அது பிரிட்டிஷாரை எதிரித்துப் பிரயோகிக்கப் பட்டது. ஸ்பானிஷ்காரர்களை எதிர்த்து இப்படிச் செய்திருந்தால், ஒரே நாளில் அகிம்சாவாதிகளையெல்லாம் கொன்று குவித்துவிட்டுப் போயிருப்பார்கள்!

// காரணம் இலங்கைப் பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்தியப் பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்தச் சிறுபான்மை இனத்தவரின் அகிம்சைப் போராட்டத்தை நசுக்கக் கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்தப் போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது //

காஷ்மீர் விஷயம் வேறு. இந்தியா முழுக்க முஸ்லீம்கள் சிறுபான்மையினரானாலும், காஷ்மீரில் அவர்கள் பெரும்பான்மையினர். அதைக் கொண்டு அங்கு சிறுபான்மையினராயிருந்த காஷ்மீரி இந்துக்களை ஒழித்து விரட்ட எண்ணினார்கள். சுய நிர்ணயம் எல்லாம் இந்த ஜிஹாதி வெறித்தனத்தைப் பூசி மெழுகப் போட்ட வார்த்தைகள்.

ஆனால், இலங்கை விஷயம் வேறு. தாங்கள் வசிக்கும் பிராந்தியத்தில் பெரும்பான்மையினராக இருந்தும் ஈழத் தமிழர்கள் நாடு முழுதும் பெரும்பான்மையினராயிருந்த சிங்களரின் கொலைவெறிக்கு ஆளானார்கள்.

9:04 AM, October 03, 2006
Anonymous said...

நல்ல சிந்தனைகளைத் தூண்டிய பதிவு. திலீபனுக்கு எனது அஞ்சலி.

அகிம்சை உளுத்துப்போன தத்துவம் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுந்த எனது எண்ணங்களை, எனது வலைப்பதிவில் பதிந்துள்ளேன்.

அன்புடன்,
சரவ்.

11:49 AM, October 03, 2006
Anonymous said...

குறும்பன் கருத்தோட நானும் ஒத்துப்போகிறேன்.

11:52 AM, October 03, 2006
Anonymous said...

ஐயா,

அகிம்சை ஆயுதமே. நெல்சன் மண்டேலா காந்திக்கு பிறகு அதனை பயன்படுத்தி காட்டினார். மார்டின் லூதர் கிங் பயன் படுத்தி காட்டினார்.

அகிம்சை ஆயுதமாயினும் அதிலும் உயிர் பலி உண்டு. தண்டி யாத்திரையில் மாண்டவர் உண்டு.திருப்பூர் குமரனின் மரணமும் ஒரு உதாரணம். காந்தியின் தலைமை அதனால் வேறு ஆயுதம் ஏந்த சொல்லவில்லை. தொடர்ந்து அகிம்சை ஆயுதமாக பயன் படுத்தப்பட்டது.

இந்திய மக்களிடையே இருந்த வேற்றுமைகளை ஆயுதமாக பிரிட்டானியர்கள் பயன்படுத்தி சுதந்திர பாரதத்தை தள்ளி வைத்துக் கொண்டனர். ஒரணியாக காந்தியின் பின் நின்றிருந்தால் முன்னமே நாம் சுதந்திரம் பெற்றிருக்கலாம்.

ஒரே நாளிலா, ஒரே மாதத்திலோ பலன் தரக்கூடியதல்ல அகிம்சை. அது தனி மனிதன் வேள்வியாருப்பின் செய்திதாளின் முதல் பக்கத்தில் சில நாள் நின்று செத்து விடும். காந்தியால் அகிம்சை புரட்சியை லட்சகணக்கான மக்களுக்கு பல ஆண்டுகள் எடுத்துச் செல்ல முடிந்தது.

காந்தியின் அகிம்சை அதிரடியாக நிகழ்வது அல்ல. நிதானமானதோரு நிகழ்வு.அதனை ஆரோக்கியமாக கையாள தேவையான நேர்மையும், சத்தியமும் அவரிடம் இருந்தது.

காந்தியின் அகிம்சைக்கு பின்னால் துப்பாக்கியும்,தோட்டாவும், சர்வாதிகாரமும் இருந்திருந்தால் அதுவும் தோற்றிருக்கும்.

தியாக உள்ளம் கொண்ட இளைஞர் பட்டாளம் அவருக்கு பின் இருந்தது.அவர் வார்த்தை கேட்கும் மக்கள் இருந்தார்கள். போய் உப்பை அள்ளு அடித்தால் வாங்கி கொள் என்று சொன்னால் கோப்ப்படாமல் கூட்டமாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் உள்ள திடமிருந்தது. அடுத்தவன் அடிக்கையில் எதுவும் பேசாமல் வந்தே மாதரம் சொல்ல தேவையான நெஞ்சுரத்தை நினைத்து பாருங்கள். அவர்கள் போர் பாசறையில் பயின்றவர் இல்லை.தலைவருடன் இறுதி உணவு உண்டவர் இல்லை. அவர்கள் தங்கள்
மேல் நிகழ்த்தபடும் வன்முறை கண்டு
புலம்பவும் இல்லை. காவிய நாயகனாய் காட்டிக் கொள்ளும் ஆர்வமும் இல்லை. தாயக விடுதலையே குறிக்கோளாய் இருந்தது.
கையில் ஆயுதம் அகிம்சையே.

அவர்களுக்கு வருங்கால தலைமுறை தங்களை தெய்வமாக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.

சாதரணமானவர்கள், உங்களையும், என்னையும் போல.அவர்கள் உழைப்பையும் ரத்ததையும் அகிம்சை
போர் முறையையும் புனிதமாக்க வேண்டாம். இழிவு செய்யாமலிருக்க முயலுங்கள்.

சுதந்திர இந்தியாவின் இன்றைய இளைஞர் கூட்டம் அவர்களை பகடி செய்கிறது. அவர்களது தியாகம் கிண்டலாக்க படுகிறது. என்ன கிழித்தார்கள், தானே நிகழ்ந்திருக்குமென்று வம்பு பேசுகிறது.

சாமான்யர்களுக்கு அகிம்சை ஆயுதமாக பயன் படுத்துதலை கற்று தருதல் எவ்வளவு கடினம் என்பதை ஆராயும் நிலையில் சுதந்திர இந்தியா இல்லை.

இருப்பதை அனுபவியுங்கள். எவனோதானே ரத்தம் சிந்தினான். உங்கள் குறை பட்டியலை உறக்க படியுங்கள். செத்து போனவன் எவனுடைய பாட்டனோ, பூட்டனோ.
அவர்கள் உயிர் தியாகம் செய்து முதல் படி ஏற்றி விட்டார்கள். அவர்களை பதினேட்டு படிகளுக்கும் எங்களை கொண்டு செல்லாமல் உயிர் விட்டது ஏனேன கேள்வி கேளுங்கள். உங்களால் முடிந்ததை நன்றாக பேசுங்கள். பேச்சுரிமையும் அவர்கள் தியாகத்தின் ஒரு பகுதிதான்.

சொந்த நாட்டின் சுதந்திர தியாகிகளை நக்கல் செய்வதும், எல்லையில் சாகும் போர் வீரனை வைவதும்தான் ஒரு fashion statement ஆக ஆகிவிட்டது.

9:53 PM, October 03, 2006
ஜோ/Joe said...

ஒரு போராட்டத்தில் அகிம்சையின் வெற்றி என்பது எதிராளி சிறிதாவது மனித தன்மைக்கு மயங்குபவனாக இருக்கிறானா என்பதை பொறுத்தது .அகிம்சையை பலவீனமாக கருதும் ஒரு எதிரியிடம் அகிம்சை எந்த அளவுக்கு எடுபடும் என்று யாரால் கணிக்க முடியும் ?

11:38 PM, October 03, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

காந்தி இந்தியாவுக்கு ஆற்றியப் பணிகளை சிறுமைப்படுத்துவது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல. அகிம்சை மட்டுமே இந்திய விடுதலைக்கு காரணமில்லை, பொருளாதாரம் தான் முக்கிய காரணம் என்பது என் நிலைப்பாடு

அகிம்சை குறித்து நான் கூற வருவதன் சாராம்சத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

"எதிரியின் வலிமையை குறைக்காமல், எதிரியின் தயவை மட்டும் நம்பிக்கொண்டு போராட முடியாது.

எதிரியை நெருக்கக் கூடிய பலம் நம்மிடம் இருந்தால் தான் அகிம்சை நம்மை வெற்றி பெற வைக்கும்"

பழைய பல்லவிகளையே பாடிக்கொண்டிருப்பவர்களுக்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

12:10 AM, October 04, 2006
CAPitalZ said...

யாரப்பா இங்க அகிம்சை வழியில் நாடு ஒற்றுமை பட்டது. தீவிரவாதத்தில் அவர்களுக்குள் அவர்கள் அடித்துக்கொள்வார்கள் என்று எல்லாம் சொன்னது.

கோட்சேயின் வாக்குமூலமும், http://www.storyofpakistan.com/ இதையும் வாசித்தாலே விளங்கும் இந்தியாவிற்குள் எவ்வளவு சிக்கல் இருக்கிறதென்பது. அகிம்சையிலேயே இந்து-முசுலிம் பிரச்சினை மற்றவர்களை கொல்லுமளவுக்கு போய் இருக்கிறது. காந்தி காலத்திலேயே இந்து-முசுலிம் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாண்டிருக்கிறார்கள். காந்திக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடந்திருக்கு. காந்தியாலேயே முசுலிம்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. அகிம்சைக் காந்தியையே சிலர் கொல்ல தூண்டப்பட்டார்கள் என்றால் அவர் மீதான வெறுப்பு எவ்வளவு இருந்திருக்கும்.

ஏதோ ஆயுதம் ஏந்தினால் நாடு சுதந்திரம் பெற்ற பின்னும் தங்களுக்குள் அடித்துகொள்வார்கள் என்று யாரோ சொன்னாங்கப்பா. அகிம்சையிலும் அதை தானே செஞ்சிருக்காங்க. ஏன் இப்பவும் இந்து-முசுலிம் பிரச்சினை நடக்குது தானே.

இவ்வளவு ஓட்டை உடைசல் அகிம்சை போராட்டத்தை வைத்து தானா அகிம்சை என்றால் அமுதம் என்று சொன்னீங்கள். கடைசியில் நான் சொன்ன "உனக்கல்லடி உபதேசம் ஊருக்கடி" என்ற கதையாவி விட்டது. அது தாங்க மற்றவங்களுக்கு தான் உபதேசம். தாங்கள் அதைச் செய்வதில்லை.

அகிம்சையால் வெள்ளையன் வெளியேறவில்லை. பொருளாதர இலாபம் இல்லாததால் தான் வெளியேறினான் போலும்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

11:37 PM, October 05, 2006
Anonymous said...

The only thing necessary for the triumph of evil is for good men to do nothing
edmund burke(1729-97)

இது தான் அஹிம்சையின் ஆதாரம் .

3:29 AM, December 21, 2008
Unknown said...

காந்தி ஒரு மிகத் தந்திரமான அரசியல்வாதி -- ஓஷோ

இந்த ஆள் காங்கிரஸ் கட்சியின் "BRAND AMBASSDOR" அவ்வளவே

மஹாத்மா என்பதெல்லாம்..ச்ச்சும்மா

காந்தி அஹிம்சை வழியில் இந்தியாவுக்கு சுதந்திரம் "வாங்கிக் கொடுத்தார்" என்று சொல்லியே பல நாடுகளில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்களை கொச்சைபடுத்துகிறார்கள்..இவர்களிடம் ஒரு கேள்வி: திபெத், பர்மாவுக்கெலாம் எப்போது விடிவு?..காந்தியைக் கேட்டு சொல்லுங்கப்பா...

2:19 AM, March 21, 2009
Seenivasan said...

nallathoru pathivu MR SASI. I accept ur all points

10:44 AM, July 15, 2009
Anonymous said...

தமிழ்வலைதளங்களின் வழிகாட்டி-முதல்தர வலைதளப்பதிவாளர்-கட்டுரையாளர் தமிழ்சசி அவர்களுக்கு வணக்கம்-திலீபன் அவர்களின் அகிம்சை போராட்டம் வணக்கத்துக்குறியது, போற்றுதலுக்குறியது. மாவீரர்கள் வரிசையில் திலீபனின் அகிம்சை மரணம்-கால்நூற்றாண்டுகாலம் ஈழவிடுதலையை முன்னெடுத்துச்சென்றது. தமிழ் ஈழப்போராட்டம் மீண்டும் மலர்ந்து சிங்கள இனவத வெறியர்களை அழித்து தமிழ் ஈழம் மலரவேண்டும்.ஆனால்,இந்திய்விடுதலைக்கான போராட்டத்தில் மகாத்மாகாந்தியடிகளின் பங்கு-அகிம்சைவழியிலான ஆயூதவடிவம்-சத்தியாகிரகம்,உண்ணாநிலை,போன்ற வடிவங்கள் விமர்சனங்களுக்கு உட்படுத்தாது விடய்ங்கள் வரிசையில் நம்மை போன்றவர்கள் எடுத்துச்செல்லவேண்டுமாய்-பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன். தீரன்சின்னமலை-வலைதளபதிவுகான டி.கே.தீரன்சமி.

5:59 AM, November 09, 2010
Anonymous said...

I accept your word Mr.Sasi. please continue your service

11:30 AM, January 08, 2011