Saturday, August 06, 2005

காஷ்மீரின் விடுதலை - 3

PAKISTAN என்ற வார்த்தையில் இருக்கும் "K" காஷ்மீரையே குறிப்பதாக ஜின்னா கூறினார். காஷ்மீர், முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசமாக இருப்பதால் பாக்கிஸ்தானிடம் இயல்பாக சேர்ந்து விடும் என்றும் நம்பினார். ஆனால் காஷ்மீர் முஸ்லீம்களுக்கும், பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியாயினும் இதுவும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தது தான்.

காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.

காஷ்மீர் முஸ்லீம் மதகுருக்களில் நந்தி ரிஷி என்பவர் முக்கியமானவர். சுபிஸம் காஷ்மீர் முஸ்லீம்களிடையே பரவ இவர் தான் காரணம். முஸ்லீம் மக்களால் மட்டுமில்லாமல் ஹிந்துக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர். இவருடைய கோயிலுக்கு Chrar-e-Sharief என்று பெயர். ஹிந்து, முஸ்லீம் மக்கள் இருவருமே இந்த கோயிலுக்கு செல்வது வழக்கம். அவரை பின்பற்றியவர்களில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தனர். மாமிசம் உண்ணாமை, தியானம் போன்றவை இவர்களால் பின்பற்றப்பட்டது.
முஸ்லீம்-ஹிந்து கலாச்சாரம் போன்ற வித்தியாசங்கள் இல்லாமல், காஷ்மீர் கலாச்சாரம் என்பதாகவே அக் காலத்தில் இருந்தது.

முஸ்லீம் பிரதேசமா, ஹிந்து பிரதேசமா என்ற கேள்வியை விட சமத்துவமான ஒரு பிரதேசமாகத் தான் காஷ்மீர் இருந்தது. எனவே தான் காஷ்மீர் இந்தியாவுடனும் செல்லக்கூடாது, பாக்கிஸ்தானுடனும் செல்லக்கூடாது, சுதந்திரமாக ஒரு சமத்துவ பூமியாக, தன் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே இருந்தது.

காஷ்மீர் மக்கள் மென்மையானவர்கள். சாதுவானவர்கள். நேரு கூட காஷ்மீர் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அப்படித் தான் கூறினார். ஆனால் சாது மிரண்டால் - அதன் எதிரொலி தான் 1989ல் வெடித்த காஷ்மீர் தீவிரவாதம்.

காஷ்மீரில் போராடுபவர்கள் அனைவரையும் பாக்கிஸ்தானின் கூலியாட்கள் என்று கூறுவதில் இந்தியாவிற்கு பெரும் வசதி இருக்கிறது. காஷ்மீர் மக்களின் உண்மை நிலை மூடிமறைக்கப்பட்டு விடும். அப்படித் தான் காஷ்மீர் மக்களின் நிலையும் மாறி விட்டது. இரு பெரு நாடுகளிடையே சிக்கிக் கொண்டு தன் அடையாளத்தை இழக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி தோன்றியது ? பாக்கிஸ்தான் தூண்டுதலால் தான் தோன்றியதா, இல்லை பிரச்சனையின் இறுதி வடிவமாக தீவிரவாதம் வெடித்ததா ?

காஷ்மீர் மக்களிடையே இருந்த விடுதலை உணர்வு, மைய அரசு தொடர்ந்து நடத்தி வந்த மொம்மை ஆட்சி போன்றவற்றால் வெறுப்புற்று ஆயுத போராட்டத்தை காஷ்மீர் இளைஞர்கள் தொடங்கிய பொழுது, இந்த தருணத்திற்காகவே பல வருடங்களாக காத்திருந்த பாக்கிஸ்தான் தன் ஆதரவு கரத்தை நீட்டி காஷ்மீரை இன்றைக்கு ரத்த பூமியாக மாற்றி விட்டது.
காஷ்மீரில் தீவிரவாதம் வேரூன்ற காரணமான நிகழ்ச்சிகளை கவனிப்போம்.

ஷேக் அப்துல்லா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மிர்சா முகமது அப்சால் பெக் போன்றோர் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணயம் கேட்டு போராட தொடங்கியதால் கொடைக்கானலில் கொண்டு வந்து சிறைவைக்கப்பட்டனர், காஷ்மீரின் தலைவரை தமிழ்நாட்டில் கொண்டு வந்து சிறை வைத்து அவரை காஷ்மீர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இந்தியா முயன்றது.
பல ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்ததையடுத்து மிர்சா முகமது அப்சால் பெக் ஆதரவுடன் "ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பு" உருவாக்கப்பட்டது. இவர்கள் ஷேக் அப்துல்லாவின் விடுதலை கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் மூலம் உருவாகிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் சபீர் ஷா, இன்றைய பிரிவினைவாத அமைப்பான "ஜம்மு காஷ்மீர் ஜனநாயக விடுதலை முண்ணனியின்" தலைவர்.

1967ல் இந்த அமைப்பை சார்ந்த சில இளைஞர்கள் சி.ஆர்.பி.எப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதே ஆண்டில் "காஷ்மீர் தேசிய விடுதலை இயக்கம்" என்ற அமைப்பை முகமது மெக்பூல் என்பவர் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் நோக்கம் காஷ்மீரை கொரில்லா போர் மூலமாக விடுவிப்பது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களுக்காக சில முறை கைது செய்யப்பட்டனர்.

பின்னாளில் காஷ்மீரின் முக்கிய தீவிரவாத அமைப்பாக உருவாகிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி (JKLF), 1978ல் அமானுல்லா கான் என்பவரால் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தவிர அல்-பத்தா, ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைப்பு என பல தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தோன்றிய வண்ணம் இருந்தன.

இவையெல்லாம் காஷ்மீரில் சுயமாக, பாக்கிஸ்தான் சார்பு இல்லாமால் காஷ்மீரின் விடுதலை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு காஷ்மீர் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள்.

1982ல் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். அவர் முதல்வர் ஆனார், பிறகு இந்திரா காந்தி அவரை டிஸ்மிஸ் செய்தார். வழக்கம் போல பலக் குழப்பங்கள் காஷ்மீரில் அரங்கேறின.

1987 தேர்தலில் பரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்த தேர்தல் தான் காஷ்மீரில் தீவிரவாதம் தோன்ற வழிவகுத்தது.

இந்த தேர்தலில் காஷ்மீரின் பல அமைப்புகள் ஒன்றினைந்து "முஸ்லீம் ஐக்கிய முண்ணனி - Muslim United Front - MUF", என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இது பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டது. பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் (76 தொகுதிகள்) போட்டியிட்டது. MUF 43 தொகுதிகளில் போட்டியிட்டது.

காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த தேர்தலில் கலந்து கொண்டனர். அவர்கள் MUF ஐ ஆதரித்தனர். இந்த தேர்தலில் பல இடங்களில் MUF வெல்லும் என்று நம்பப்பட்டது.

ஆனால் வழக்கம் போல இந்த தேர்தலிலும் தில்லியில் இருந்து தேர்தல் முறைகேடுகள் அரங்கேறின. MUFன் தேர்தல் ஏஜெண்ட்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் முறையற்று நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சரியாக நடக்க வில்லை.

MUF 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பரூக் அப்துல்லா வெற்றி பெற்று முதல்வரானார்.

பல இடங்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்க கூடிய MUF முறையற்ற தேர்தலால் தோல்வியடைந்ததை கண்ட காஷ்மீர் இளைஞர்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை இழந்தனர். ஆயுதம் ஏந்த தொடங்கினர். 1987 தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் பின்னர் தீவிரவாதிகளாக மாறினர்.

1987 தேர்தல் முறையாக நடந்திருந்தால் தீவிரவாதம் தோன்றியிருக்காது. ஆனால் தில்லியின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் காஷ்மீரில் அமைந்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கும். ஆனால் இந்திய ஆதரவு அரசாங்கம் தான் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர்கருத்துக்கள் இருக்ககூடாது என்ற மைய அரசின் எண்ணம் தான் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ஆட்சி மீது அவநம்பிக்கையை எதிர்படுத்தியது. காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்.

தாத்தா நேரு பிள்ளையார் சுழி போட்ட பிரச்சனையை பேரன் ராஜீவ் காந்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவி விட்டார். ஒரு குடும்பம் காஷ்மீரிகளின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாகி விட்டது.

பல ஆண்டுகளாக காஷ்மீரில் என்ன செய்யலாம் என்று காத்திருந்த பாக்கிஸ்தான் இந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவத் தொடங்கியது. ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. பயிற்சி மையங்களை நடத்தியது. தீவிரவாதத்தை வளர்த்தது.

அதே நேரத்தில் JKLFன் கோஷமும் பாக்கிஸ்தானை எரிச்சல் படுத்தியது.
அவர்கள் கேட்டது ஒட்டுமொத்த விடுதலை. இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றிணைந்த காஷ்மீரை உருவாக்கி ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவது. இதனை பாக்கிஸ்தான் விரும்பவில்லை. காஷ்மீர் தன்னுடன் இணைய வேண்டும் என்பது தான் பாக்கிஸ்தானின் எண்ணம்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி - JKLF, காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில், காஷ்மீரின் சுதந்திர கோஷம் வலுப்பெற்றிருந்த நிலையில் ஹிஸ்புல் முகாஜீதீன் Hizbul Mujahideen என்ற அமைப்பை JKLFக்கு போட்டியாக பாக்கிஸ்தான் காஷ்மீரில் களம் இறக்கியது.
மதச்சார்பின்மையையும் காஷ்மீரின் விடுதலையையும் வலியுறுத்தி போராட தொடங்கிய JKLF ஒரம்கட்டப்பட்டு ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றை சேர்ந்த மதவெறி கும்பல்கள் காஷ்மீர் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. ஹிந்துக்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பிய காஷ்மீரிகளுக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதத்தை இவர்கள் வலியுறுத்த தொடங்கினர். மதரீதியாக ஹிந்து, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் நடத்தி மதநல்லிணக்கத்தை குலைத்தனர்.

Sufism என்ற மென்மையான முஸ்லீம் வழி வந்த காஷ்மீர் மக்கள் இன்று தலிபான் போன்ற முரட்டுதனமான முஸ்லீம் பயங்கரவாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். காஷ்மீரிகளின் விடுதலையை ஆதரிப்பதாக கூறி அந்த போராட்டத்தின் முகத்தை பாக்கிஸ்தான் சிதைத்து விட்டது.

உண்மையான காஷ்மீரிகள் தங்கள் விடுதலையையும் அல்லது குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க, காஷ்மீர் பிர்ச்சனை முஸ்லீம் பயங்கரவாதமாக, ஜிகாத் என்ற பெயரில் உருமாற்றப் பட்டு விட்டது.


இன்று காஷ்மீரிகள் நினைத்தால் கூட தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க முடியாதவாறு அவர்களது கலாச்சாரமும், மத நல்லிணக்கமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

0 மறுமொழிகள்: