சசியின் டைரி

வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, April 08, 2018

நெய்வேலி, கனிமவளச் சுரண்டல்…

தொழில்வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களும், வட இந்தியத் தனியார் நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கனிம வளச் சுரண்டலில் இந்தியாவெங்கும் ஈடுபட்டு வருகின்றன. கனிம வளங்களைச் சுரண்டத் தோண்டப்படும் சுரங்கங்களும் (Mining), பிராக்கிங் (Fracking) போன்றவை எந்தப் பெரிய தொழில்வளர்ச்சியையும் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பெரிய அளவில் இயந்திரமயமாக்கப்பட்ட பிராக்கிங், சுரங்கங்கள் போன்றவை அதிக அளவில் வேலைவாய்ப்புகளைக் கொடுப்பதில்லை. பெரும் சூழலியல் கேடுகளை ஏற்படுத்தும் கனிம வளச் சுரண்டல் அதனை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கே லாபம் கொடுக்கக்கூடியவை. சாமானிய மக்களின் வாழ்க்கை மேம்படுத்த எந்த விதப் பெரிய வேலைவாய்ப்புகளையும், பொருளாதார மேம்பாட்டினையும் கனிம வளங்களைச் சுரண்டும் நிறுவனங்கள் அளிப்பதில்லை. இவை உலகெங்கும் நிருபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், கனிம வளங்கள் சுரண்டப்படும் நெய்வேலியிலும் இது நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தன்னுடைய சந்தையைத் தாராளமயமாக்கிய சூழலில் நிறைய ஆட்டோமோபைல் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளும் தமிழகத்திலும், இந்தியாவின் பிற இடங்களிலும் நுழைந்தன. இந்தத் தொழிற்சாலைகளுக்குப் பல மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தாலும், தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எதுவும் இருந்ததில்லை. தமிழகம் தொழில்துறையை வரவேற்கவே செய்தது. வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் பெருக வேண்டும் என்றால் தொழில்கள் வளர வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்கள் நமக்குத் தேவை. லட்சக்கணக்கானோர் இன்று தமிழகத்திலேயே பலத் தொழிற்ச்சாலைகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாணியாற்றி வருகிறார்கள்.

ஆனால் தாரளமயமாக்கப்பட்ட சூழலில் இந்தியாவில் இருக்கின்ற கனிம வளங்களை ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் குறிவைத்தன. அதில் குறிப்பிடத்தக்கது வேதாந்தா நிறுவனம். காங்கிரஸ் கட்சியும், பாரதிய சனதா கட்சியும் இந்தக் கனிம வளத்தைச் சுரண்டும் நிறுவனங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் 2004ல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும் வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்தவர் ப.சிதம்பரம். வட இந்தியாவில் குறிப்பாகச் சட்டீல்சுகர், சார்க்கண்ட் போன்ற மலைப் பகுதிகள் நிறைந்த மாநிலங்களை இந்த நிறுவனங்கள் குறிவைத்தன. தற்போதைய பாரதீய சனதா கட்சி ஆட்சி, பிராக்கிங் மூலம் ஐட்ரோ கார்பன் சுரண்ட காவிரி டெல்டா உள்ளிட்ட பல இடங்களை இந்தியாவெங்கும் குறிவைத்துள்ளது.

உண்மையில் கனிமவளச் சுரண்டலால் அப் பகுதி மக்களுக்கு நன்மை இருக்கிறதா? மக்களின் பொருளாதாரம் உயருகிறதா?


கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தை எடுத்துக் கொள்வோம். நெய்வேலி சுரங்கங்களையும், ஐட்ரோ கார்பன் போன்றவற்றை ஒப்பிட முடியாது என்றாலும் கனிம வளச் சுரண்டல், அதனைச் சார்ந்த பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டும் நெய்வேலியைச் சார்ந்து இங்கு எழுத முனைந்துள்ளேன். தவிரவும், தமிழகத்தின் முதல் மற்றும் இன்றளவும் முக்கியமான கனிம வளர்ச்சுரண்டல் என்றால் அது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரண்டல் தான். அதனால் நெய்வேலியைச் சார்ந்து இந்தப் பிரச்சனையை அணுகலாம் என்று தோன்றியது.


கனிம வளங்கள், அந்த வளங்களைச் சுரண்டும் நிறுவனங்களுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கக்கூடியது. ஆனால் சுரங்கங்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் கேள்விக்குரியது. கனிம வளங்களைச் சுரண்ட சுரங்கங்கள் தோண்டும் பொழுது அந்தப் பகுதி மக்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சுரங்கங்கள் ஏற்படுத்தும் சூழலியல் கேடுகளால் மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக அந்த இடம் படிப்படியாக மாறி விடுகிறது. நிலக்கரி முழுவதுமாகத் தோண்டி எடுக்கப்பட்ட பகுதிகள் வாழத் தகுதியற்றப் பகுதியாகவே நெய்வேலியில் இருக்கிறது. நிலக்கரிச் சுரங்கம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் சூழலில் பெரும்நிலப்பகுதிகள் இவ்வாறான பயனற்ற நிலங்களாக மாறி விடுகின்றன.

பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை விழுங்கி தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இன்றைக்குச் சுமார் 15,000 பேர் மட்டுமே நேரடி தொழிலாளர்களாக இருக்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் சில ஆயிரம் பேர் இருப்பார்கள். நவீன இயந்திரங்களின் உதவியுடன் நடக்கும் சுரங்க மற்றும் மின் உற்பத்தி வேலைகளுக்குப் பெரிய அளவில் தொழிலாளர்களின் தேவை இல்லை. பொறியாளர்கள், அந்தத் துறையில் முன் அனுபவம் பெற்றவர்கள், அதனைச் சார்ந்த கல்வியறிவு கொண்டவர்கள் தான் இத்தகைய நிறுவனங்களின் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள். கட்டிடவேலைகள், ஓட்டுனர் வேலைகள் போன்றவை தான் அத் துறைச் சார்ந்த அனுபவம் இல்லாத மக்களுக்குக் கிடைக்கும் வேலைகள்.

பெரும்பாலும், விவசாய நிலங்களைக் கைப்பற்றி அந்த நிலங்களில் இத்தகைய கனிம வளங்களைச் சுரண்டும் நிறுவனங்கள், அந் நிறுவனத்தில் பணியாற்ற பிற இடங்களில் இருந்து தான் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். வெறும் விவசாயம் மட்டுமே அறிந்த அப்பகுதி மக்களுக்கு அதனால் பெரிய பாதிப்புகள் தான் ஏற்படுமே தவிர வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆரம்பகாலங்களில் பெயரளவுக்குக் கிடைக்கும் சில வேலைகள் கூடப் பிறகு அந் நிறுவனங்கள் தங்களைப் பலப்படுத்திக் கொண்டப்பிறகு தேவைப்படுவதில்லை. இதனால் கனிம வளங்களைச் சுரண்டும் நிறுவனங்கள் நிறையவேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற அறிவிப்புகளில் எந்த உண்மையும் இல்லை. நெய்வேலியை எடுத்துக் கொண்டால் கூட நிலம் எடுத்தவர்களுக்கு வேலை, இழப்பீடு என்பது இன்றைக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நிலம் எடுத்தாலும், வேலைக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.

இவ்வளவு பிரச்சனைகளை உள்ளடக்கிய சுரங்கங்கள் எந்தளவுக்கு உற்பத்தியையும், உபதொழில்களையும் கொடுக்கின்றன ?

நெய்வேலியை எடுத்துக் கொண்டால் கூட இந்த அறுபது ஆண்டுகளில் நெய்வேலி தயாரிக்கும் மொத்த மின்சாரம் சுமார் 3000 மெகாவாட் மட்டுமே. ஆனால் ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பில் அமைந்துள்ள மேட்டூர் மின் நிலையம் சுமார் 1400மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. மேட்டூர், தூத்துக்குடி போன்ற மின் நிலையங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அதனை விட மிகப் பெரிய நிலப்பரப்பை ஆக்கிரமிப்புச் செய்து சூழலியல் கேடுகளை விளைவிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரம் ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவு. ஆனால் நிலக்கரியை எடுக்க நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு நெய்வேலியைச் சுற்றிய பகுதி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த கடலூர் மாவட்டமும் மிகப் பெரிய சூழலியல் கேடுகளுடன் வாழ்ந்து வருகின்றது.

இந்தியாவில் உள்ள சுரங்கங்களில் முதன்மையான சுரங்கம் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம். மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வருவாய் சுமார் எட்டாயிரம் கோடிகள். ஆண்டு லாபம் மட்டுமே சுமார் மூவாயிரம் கோடிகள். ஆனால் அப்படியான மிகப் பெரிய சுரங்கமும், நிறுவனமும் அமைந்த கடலூர் மாவட்டம் தான் தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. கனிம வளங்களைச் சுரண்டினால் வளம் கொழிக்கும், பொருளாதாரம் உயரும் என்றால் நெய்வேலியால் கடலூர் மாவட்டம் பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டாமா ? வளர்ச்சி பெற்றது யார் ? தமிழகமும், தமிழக மக்களும் நெய்வேலியால் பெற்றது என்ன ? இழந்தது என்ன ? பெற்றதை விட இழந்ததே அதிகம்.

சில புள்ளிவிபரங்கள்

நெய்வேலியில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாராம் - சுமார் 3000 மெகாவாட் (இது பல மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. என்.எல்.சி நிறுவனம் நெய்வேலி தவிரப் பிற இடங்களிலும் மின்சாரம் தயாரிக்கிறது. அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை).

தமிழக அரசு காற்றாலை மூலம் தயாரிக்கும் மின்சாரம் -  7,870 மெகாவாட் . இந்திய அளவில் தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடத்திலும், உலகளவில் தமிழகம் ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது (https://goo.gl/u5vv8b). சூழலியலுக்குக் கேடு விளைவிக்காத காற்றாலை மின் உற்பத்தியில் உலகளவில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.


பி.கு.
நெய்வேலியின் மின்சாரம் கர்நாடகத்திற்குக் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை காவிரி பிரச்சனை வரும் பொழுதெல்லாம் எழுந்தாலும் நெய்வேலியின் மின்சாரம் இல்லாமல் கர்நாடகம் இயங்க முடியும். காரணம் கர்நாடகத்தின் மொத்த மின் தேவையில் நெய்வேலி மின்சாரத்தின் பங்கு மிகவும் சொற்பமே. தமிழகத்தின் மின் தேவையில் கூட நெய்வேலியின் பங்களிப்பு மிகவும் குறைவே…



Leia Mais…